வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மத்திய மந்திரி பசுபதிகுமார் பராஸ் தொடங்கி வைத்தார்

தஞ்சையில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப கழகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை மத்திய மந்திரி பசுபதி குமார் பராஸ் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-08 20:47 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சையில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப கழகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை மத்திய மந்திரி பசுபதி குமார் பராஸ் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மகளிர் தின விழா

தஞ்சையில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப கழகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்கான சிறப்பு விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சியை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் இணை மந்திரி பிரஹலாத் சிங் படேல் தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சியில் திட்ட வழிகாட்டுதல்கள், மானிய-உதவி ஏற்பாடுகள், விதிமுறைகள், பேக்கேஜிங் தொழில்நுட்பம், மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கப்பட்டன. இதில் தஞ்சை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 250 பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆராய்ச்சி மையம்

அதனைத்தொடர்ந்து, தேசிய உணவு தொழில்நுட்ப கழகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் புதிதாக கட்டப்பட்ட நிறுவனத்தின் நுழைவு வளைவையும், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் துறை மந்திரி பசுபதிகுமார் பராஸ் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகளை தமிழகத்தில் திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த மையம் மேம்பட்ட உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி சார்ந்த மேம்பாட்டை ஊக்குவிக்கும், மேலும் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு ஆராய்ச்சி பணிகளுக்கும் வணிகமயமாக்கலுக்கும் வழி வகுக்கும். இம்மையம் மேம்பட்ட உணவு பதப்படுத்தும் அணுகுமுறைகள் பயிற்சியையும் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சி அளிக்கும்

இதில் தேசிய உணவு தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் பேசியதாவது:-
தஞ்சையில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம், இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் மேற்கொள்ள பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறது.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறைகளில் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்ய வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் முதல் மேம்பட்ட ஆராய்ச்சி வசதியாகும். உணவு பொருட்களின் தரம் மற்றும் ஆயுட்காலத்தை வெப்பம் சாரா தொழில் நுட்பத்தின் மூலம் அதிகரிப்பதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், வெப்பம் சாரா தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை இந்த மையம் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இணைய வழியில், உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் கலந்துகொண்டு பேசினார். முடிவில் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் இணை செயலர் மின்ஹாஜ் ஆலம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்