அரியலூரில் மகளிர் தினவிழா

அரியலூரில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது

Update: 2022-03-08 20:17 GMT
அரியலூர் 
அரியலூர் நகரில் காவலர் குடியிருப்பு மைதானத்தில் பெண்களுக்கு ஊசியில் நூல் கோர்த்தல், கரண்டியில் எலுமிச்சை பழத்தை வைத்துக் கொண்டு கீழே விழாமல் ஓடுதல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்ததுடன் அவரது மனைவி மற்றும் மகளுடன் போட்டிகளை பார்வையிட்டு உற்சாகப்படுத்தினார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ரொட்டி மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு உடைகள் ஆகியவற்றை பெண்கள் அமைப்பு சார்பில் முன்னாள் அரசு வக்கீல் சாந்தி வழங்கினார். அப்போது மருத்துவமனை டாக்டர்கள் உடனிருந்தனர். 
வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம், விளாங்குடியில் உள்ள கருணை இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் போலீசார் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இல்லத்தின் திட்ட இயக்குனர் பாலகுமாரன் தலைமை வகித்தார். இதில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலந்து கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பரிசுகள் மற்றும் ஆடைகளை வழங்கினார். விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி(அரியலூர்), சுமதி (ஜெயங்கொண்டம்) உள்பட பலர் பங்கேற்றனர். 
தா.பழூர்
 தா.பழூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார வேளாண்மை அலுவலகம், வட்டார தோட்டக்கலை அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சில அலுவலகங்களில் பணிபுரியம் பெண்கள் ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மகளிர் தினத்தை முன்னிட்டு இனிப்பு, காரம், தேநீர் வழங்கி மகிழ்ச்சியுடன் பெண்கள் கொண்டாடினர். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் மகளிர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்