மகளிர் தினம் கொண்டாட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது
பெரம்பலூர்
மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணியின் கூற்றுக்கிணங்க பெண்களின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரிலும், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையிலும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ச.மணி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து மகளிர் போலீசார் மற்றும் அமைச்சு பெண் பணியாளர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து கூறினார். பின்னர் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய பிரகாசம், மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், மகளிருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் போலீசார் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நட்டு வைத்தனர்.
அரசு பள்ளி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினவிழா பள்ளி தலைமையாசிரியர் நாகமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஆசிரியைகள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதில், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் பொன்னுதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகங்களில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.