குடைகளில் கோரிக்கைகளை எழுதி நூதன ஆர்ப்பாட்டம்
உலக மகளிர் தினத்தையொட்டி பேராவூரணியில் குடைகளில் கோரிக்கைகளை எழுதி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேராவூரணி:-
உலக மகளிர் தினத்தையொட்டி பேராவூரணியில் குடைகளில் கோரிக்கைகளை எழுதி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
உலக மகளிர் தினத்தையொட்டி பேராவூரணியில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்.
கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். மலம், சாக்கடை அள்ளும் வேலையை எந்திரமயமாக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகள் குடைகளில் எழுதி வைக்கப்பட்டு நூதன முறையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தங்க குமரவேல் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள்
அரசியல் செயலாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் மருதுகுமார், முத்தையா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி காயாம்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி கருப்பையா, திராவிட விடுதலைக்கழக நிர்வாகி திருவேங்கடம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் சார்பில் அனல் ரவீந்திரன், திராவிடர் கழகம் நிர்வாகி ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பெண்கள், மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.