திருப்பத்தூர் அருகே சூதாடிய 21 பேர் கைது
திருப்பத்தூர் அருகே சூதாடிய 21 பேர் கைது:6 கார் பறிமுதல்
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரம் ரோட்டில் கம்பனூர் விலக்குப் பகுதியில் ஒரு தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக, சிவகங்கை சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சபரிதாசன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு தோப்பில் பணம் வைத்து சூதாடிய காரைக்குடியை சேர்ந்த முத்துமாணிக்கம்(வயது 55) உள்பட 21 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து சூதாடிய 21 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 823, 6 கார், ஒரு மோட்டார் சைக்கிள், 26 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.