பூச்சொரிதல் விழாைவயொட்டி கூடுதல் பஸ் இயக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி கூடுதல் பஸ் இயக்கப்பட உள்ளது.

Update: 2022-03-08 19:26 GMT
திருச்சி, மார்ச்.9-
சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி கூடுதல் பஸ் இயக்கப்பட உள்ளது.
ஆலோசனை கூட்டம்
சமயபுரம் மாரியம்மன்கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
போலீசார் பாதுகாப்பு
பூச்சொரிதல் விழா நடைபெறும் 13 மற்றும் 14-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். கோவிலில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி செய்ய வேண்டும்.
மருத்துவ முகாம்
மின்வாரிய அலுவலர்கள் தடையற்ற மின்சாரம் வழங்கவும், பழுது ஏற்பட்டால் நிவர்த்தி செய்யவும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பொதுமக்களின் அவசர தேவைக்காக மருத்துவ முகாம்கள் அமைக்கவேண்டும். ஆம்புலன்ஸ், நடமாடும் மருந்தகம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கோவில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாளஅட்டை வழங்க வேண்டும். பூச்சொரிதல் விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்திட அனைத்துத்துறைஅலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரித்தா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்