தண்டராம்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
தண்டராம்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய மலைப்பாதை பகுதியில் 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எஸ்.டி. மற்றும் எம்.பி.சி. மக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு பெற தடையில்லா சான்று கேட்டு ஒரு வருடத்திற்கு முன்பாக மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு புறம்போக்கு இடத்தைய ஆக்கிரமித்து வேலி அமைக்கும் நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோர் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார், தாலுகா செயலாளர் அண்ணாமலை தலைமையில் தண்டராம்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
தகவல் அறிந்த தாசில்தார் பரிமளா, வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.