மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மணவாளக்குறிச்சி,
மார்ச்.9-
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெண்களின் சபரிமலை
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு பெண்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவதால், “பெண்களின் சபரிமலை” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் மாசிக் கொடைவிழாகடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு வழிபாடு, பல்லக்கில் அம்மன் பவனி, சமய மாநாடு, யானை மீது களப பவனி, பஜனை, வில்லிசை, பரதநாட்டியம், இசை சொற்பொழிவு, ஆன்மிக உரை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம்
மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்குபூஜை நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அவ்வாறு வந்த பக்தர்கள் ஆங்காங்கே உள்ள தென்னந்தோப்புகளில் கூடியிருந்து பொங்கலிட்டு அம்மனை தரிசனம் செய்தனர். மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஒடுக்கு பூஜை
நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களப பவனியும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியும், 4.30 மணிக்கு அடியந்திரபூஜை, குத்தியோட்டம் ஆகியவை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 9.30 மணிக்கு இன்னிசை விருந்தும், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது.
மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண் பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகளால் கோவிலுக்கு பவனியாக கொண்டுவரப்பட்டது. 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது. அப்போது இவற்றை தலையில் சுமந்து வந்த பூசாரிகளின் வாய்ப்பகுதி சிகப்பு துணியால் மூடி கட்டப்பட்டிருந்தது. உணவுப் பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராக பொருத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஒடுக்கு பவனி வரும்போது கோவிலை சுற்றி திரளான பக்தர்கள் திரண்டு இருந்தனர். ஒடுக்கு பவனி கோவிலை ஒருமுறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன்பு இறக்கி வைக்கப்பட்டது. இந்த பவனி வந்த பகுதியில் பக்தர்கள் அமைதியாக இருந்தனர். இதனால் ஒரே நிசப்தமாக இருந்தது.
இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதைத்தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனை நடந்த போது கோவில் கொடிமரத்தில் கொடி இறக்கப்பட்டது.
சிறப்பு பஸ்கள்
பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கியது. அதுபோல் கேரள அரசு போக்குவரத்து கழகமும் சிறப்பு பஸ்களை இயக்கியது.
திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.