அரிமளம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

அரிமளம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-08 18:52 GMT
அரிமளம்:
அரிமளம் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மேகலா முத்து தலைமை தாங்கினார். ஆணையர் அமுதவல்லி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில் 31 செலவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற விவாதத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக் குழு தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெயர் பலகை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஒன்றியக்குழு கூட்டம் நடைபெறும் பொழுது கட்டாயம் ஒன்றிய பொறியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அப்போது தான் தங்கள் பகுதி உடைய தேவைகளை எடுத்துக் கூறி விளக்கம் பெற வாய்ப்பாக இருக்கும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் 2022-2023 ஆண்டில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பணிகளை தேர்வு செய்து ஒன்றிய ஆணையரிடம் வழங்க தெரிவிக்கப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக திருக்குறளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் வாசித்தார். கூட்ட தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜா வாசித்தார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கிய சகாயராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்