அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பேச்சு
அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.
வேலூர்
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் அருளரசு தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு முன்னிலை வகித்தார். இணை பேராசிரியர் காந்தாஷோபா வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் மிகவும் முக்கியமானவர்கள். பெண்கள் தான் இந்த நாட்டின் தூண்கள்.
அவர்களுக்கு எவ்வித பயமும் இருக்க கூடாது. இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். சிலதுறைகளில் ஆண்களை விடவும் பெண்கள் சாதிக்கிறார்கள். எந்த இடத்திலும் என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் இருந்தாலே பாதி வெற்றியை அடையலாம். வாழ்க்கைக்கு கல்வி, பயிற்சி, ஆசை ஆகியவை முக்கியம். அனைத்தையும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும். பெண்கள் தங்களின் முக்கியத்துவம், தனித்தன்மை குறித்து அறிந்து அதில் முன்னேற வேண்டும்’’ என்றார்.
முடிவில் உதவி பேராசிரியர் சுதா நன்றி கூறினார்.