குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
கீழையூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஊராட்சியில் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து கீழையூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூடத்தெரு மற்றும் சிவன் கோவில் தெரு ஆகிய இரண்டு இடங்களில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் கீழையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தஜோதி கலந்து கொண்டு குடிநீர் சுத்திரிகரிப்பு நிலையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். இதில் கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் பால்ராஜ், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், ஊராட்சி செயலாளர் சரவணபெருமாள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.