சித்தலூர் கோவில் திருவிழா: கடைகளுக்கான வாடகை வசூலை முறைப்படுத்த வேண்டும் வியாபாரிகள் தரப்பில் வலியுறுத்தல்

சித்தலூர் கோவில் திருவிழாவில் கடைகளுக்கான வாடகை வசூலை முறைப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் வலியுறுத்தினர்.

Update: 2022-03-08 17:45 GMT

கண்டாச்சிமங்கலம், 

 கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மயானக்கொள்ளை விழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

 விழாவில் இன்று  (புதன்கிழமை) மயான கொள்ளை நிகழ்ச்சியும், நாளை(வியாழக்கிழமை) தேர் திருவிழா நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

 இந்நிலையில் விழாவின் போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கோவிலுக்கு அருகே பலவேறுவகையான கடைகளை அமைப்பாளர்கள். அந்த வகையில், கடந்த சில தினங்களாக கடைகள் அமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் ராட்டினம் அமைப்பவர்களுக்கும் 2 நாட்கள் கடை அமைக்க தரை வாடகையை இந்து சமய அறநிலையத்துறையினர் நிர்ணயம் செய்து,   வசூலித்து வருகிறார்கள்.


தற்போது கொரோனா உள்ளிட்ட நெருக்கடியால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  தரை வாடகையை அதிகமாக வசூலிக்கிறார்கள். வியாபாரிகள் நலன் கருதி இந்த வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரத்தில் வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் பணம் முறையாக கோவில் நிர்வாகத்திற்கு சென்றடைகிறதா என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பதுடன், வாடகை கட்டணத்தையும் முறைப்படுத்திட வேண்டும் எனவும் வியாபாரிகள் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்