வேலூர் அருகே பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு

வேலூர் அருகே பெண்ணிடம் 2½ பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-03-08 17:32 GMT
வேலூர்

வேலூரை அடுத்த சித்தேரி தென்றல்நகரை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சுலோச்சனா (வயது 42). இவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சமையல் செய்வது, துணிதுவைப்பது உள்ளிட்ட வேலைகள் செய்து வருகிறார். சுலோச்சனா நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைகளை முடித்து விட்டு, அப்பகுதியில் வசிக்கும் வீட்டு உரிமையாளரிடம் வாடகை கொடுத்து விட்டு இரவு 10 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் முகத்தை கைக்குட்டையால் மறைத்தபடி வந்த 2 மர்மநபர்கள் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

 ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மர்மநபர்கள் திடீரென சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் செயினை பறித்தனர். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். அவருடைய சச்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். ஆனால் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் அணைக்கட்டு சாலை வழியாக வேகமாக தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சுலோச்சனா அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏமுராஜ் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்