ராசிபுரம் அருகே ரூ.64¼ லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடைகள்-அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்
ராசிபுரம் அருகே ரூ.64¼ லட்சத்தில் அமைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடைகளை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துக்காளிப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அவர் குத்துவிளக்கேற்றினார். இதேபோல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.41 லட்சத்து 55 ஆயிரத்தில் முத்துக்காளிப்பட்டி, ராசிபுரம் பாரதிதாசன் சாலை, கோனேரிப்பட்டி காந்திநகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட ரேஷன் கடைகளையும் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசுவாமி, ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், முன்னாள் துணை தலைவர் கல்யாண் ரங்கசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, வக்கீல் ராஜேந்திரன், ராசிபுரம் நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், அயலக அணி மாநில துணை அமைப்பாளர் முத்துவேல் ராமசுவாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் சிவகுமார், குருக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.