இரவில் வெப்ப அளவுகள் உயர்ந்து வருவதால் கோழிகளில் வெப்ப அயற்சி காணப்படும்-ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை

இரவில் வெப்ப அளவுகள் உயர்ந்து வருவதால் கோழிகளில் வெப்ப அயற்சி காணப்படும் என ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-03-08 17:32 GMT
நாமக்கல்:
மழைக்கு வாய்ப்பு இல்லை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவும் கோடை காலத்தில் போதிய அளவு பசுந்தீவனங்கள் கிடைக்காத போது, ஹைட்ரோ போனிக் பசுமை குடில் முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம்.
வெப்ப அயற்சி
வரும் நாட்களில் பகல் வெப்பத்துடன் இரவு வெப்பமும் உயர வாய்ப்பு உள்ளதால், கோழிகளில் வெப்ப அயற்சி காணப்படும். குறிப்பாக 60 வாரத்திற்கு மேற்பட்ட முட்டை எடை அதிகமாக உள்ள கோழிகளில் இறப்பு காணப்படலாம். தீவனம் உட்கொண்ட பின்பு, அதற்கு ஏற்றார்போல் எடுக்க வேண்டிய நீரின் அளவு குறைவதால், கோழிகள் இறக்க நேரிடலாம். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை குறைந்தபட்சம் 200 முதல் 220 மில்லி லிட்டர் என்ற அளவில் கோழிகள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்தால், கோழிகளில் வெப்ப அயற்சியை நீக்க முடியும்.
அதை நடைமுறைப்படுத்தும் வகையில், குழாய்களில் நீரின் வெப்பத்தை குறைக்கும் வகையில், தொடர் நீர் ஓட்டம் எனப்படும் முறையில், தொடர்ச்சியாக நீரை நிறுத்தாமல் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்தால், பண்ணைகளில் கோழிகளின் தீவனம் எடுக்கும் அளவு அதிகரிப்பதுடன், தேவைக்கு ஏற்ப தண்ணீர் எடுக்கும் அளவு உயர்ந்து வெப்ப அயற்சியை தடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்