நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஓசூர் மாநகராட்சியில் ரூ1 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்கம்
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஓசூர் மாநகராட்சியில் ரூ1 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் நகரப்பகுதிக்கு விரிவுபடுத்தப்பட்டு, ஓசூர் மாநகராட்சி மண்டலம் 8-ல் உள்ள 37 முதல் 45 வரையிலான வார்டுகளில் கால்வாய் தூர்வாருதல், பழைய கால்வாய்களை மேம்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு, நுண்ணுயிர் செயலாக்க மையம் உள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தனர். மேலும் இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் ராஜேந்திரன், கவுன்சிலர் மஞ்சுளா முனிராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.