தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

Update: 2022-03-08 17:30 GMT
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 


புதர்கள் ஆக்கிரமிப்பு 

கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக் கட்டிடம் வர்ணம் பூசாமலும், உரிய பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. அத்துடன் பள்ளி வளாகத்தில் புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி இந்த பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை  அகற்றி, கட்டிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும். 
கிருஷ்ணகுமார், கீழ் கோத்தகிரி.

நிழற்குடையில் சுவரொட்டிகள்

சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நிழற்குடை அமைக்கப் பட்டு உள்ளது. இந்த நிழற்குடை உட்புறம் மற்றும் வெளிபுறங்களில் கண்ணீர் அஞ்சலி, பூப்புனித நீராட்டு விழா, கடை திறப்பு விழா என பல்வேறு விதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால், நிழற்குடை அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடையில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பாக்கியம், சுல்தான்பேட்டை.

குண்டும் குழியுமான சாலை 

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் சமத்துவபுரம் செல்லும சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இந்த சாலையில் பள்ளி மாணவர்கள்தான் அதிகளவில் செல்கிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ராஜா, வெள்ளக்கிணறு. 

மெல்ல மடியும் மரங்கள்

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் முத்துமலை முருகன் கோவில் உள்ளது. இந்த மலையடிவாரத்தில் உள்ள  மரங்களில் அதிகளவில் ஆணிகள் அடிக்கபட்டு விளம்பர பலகை தொங்கவிடப்பட்டு உள்ளது. இதனால் சாலையோரத்தில் உள்ள மரங்கள் மெல்ல மடிந்து வருகின்றன. இந்த நிலை நீடித்தால் அந்த மரங்கள் பட்டுப்போக வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மரங்களில் ஆணிகள் அடிப்படை தடுப்பதுடன், இதுபோன்று செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயன், மலுமிச்சம்பட்டி. 

பழுதான சாலை

கோவை தடாகம் செல்லும் சாலையில் இருந்து முத்தண்ணன் குளக்கரை வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பழுதடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இங்கு விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
வடிவேல், கோவை. 

தண்ணீர் இல்லாத கழிவறை

கோவை அருகே உள்ள தேவராயபுரம் பரமேஸ்வரன் பாளையத்தில் கொங்கு திருப்பதி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இங்கு பக்தர்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. தண்ணீர் வசதி செய்யப்படாததால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கழிப்பிடத்துக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
சுப்பிரமணியம், தொண்டாமுத்தூர். 

தினத்தந்தி செய்தி எதிரொலி:
சாதாரண பஸ்கள் இயக்கப்பட்டது

கோவையை அடுத்த கோவைப்புதூரில் இருந்து காந்திபுரம் வழித்தடத்தில் 3டி பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் அனைத்து பஸ்களும் சொகுசு பஸ்களாக இயக்கப்பட்டதால் அதில் கட்டணம் அதிகம் என்பதால் பயணிகள் அவதியடைந்தனர். எனவே இந்த வழித்தடத்தில் சாதாரண பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாதாரண பஸ்களை இயக்கி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
சுரேஷ், கோவைப்புதூர். 

சிதறும் குப்பைகளால் அவதி

கோவை காந்திமாநகரில் உள்ள மின்மயானம் அருகே குப்பைகள் மறுசுழற்சி மையம் உள்ளது. இந்த மையத்துக்கு லாரிகளில் குப்பைகளை கொண்டு வரும்போது வலை போடுவது கிடையாது. இதனால் ஏராளமான குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து குப்பைகளை ஏற்றிச்செல்லும் லாரிகளில் வலை போட்டு கொண்டு செல்ல வேண்டும்.
முருகன், காந்திமாநகர். 

கொசுக்கள் தொல்லை

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கொசு மருந்து முறையாக அடிக்காததால்  அங்கு கொசுத்தொல்லை அதிகளவில் இருக்கிறது. இதனால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறையாக கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
விஜயராகவன், ராமநாதபுரம்.  


மேலும் செய்திகள்