வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
கிணத்துக்கடவு அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
செல்போன் பறிப்பு
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா திருவாதவூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 34). இவருடைய மனைவி பாக்கியம். இவர் கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் உள்ள நூல் மில்லில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சோமசுந்தரம் நேற்று முன்தினம் மனைவியை பார்க்க வந்தார்.
பின்னர் மனைவியை பார்த்துவிட்டு மதுரைக்கு செல்ல கோவில்பாளையம் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சோமசுந்தரம் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
இந்த நிலையில் நேற்று இரவு தாமரைக்குளம் பகுதியில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு 3 பேர் சென்றனர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள், பொள்ளாச்சி ஜோதிநகர் பி காலனியை சேர்ந்த என்ஜினீயர் நவீன் (22), குறிஞ்சிநகர் பி.கே.எஸ். காலனியை சேர்ந்த சூரியா (22), தனுஷ் ராம் (21) என்பதும், மதுகுடிக்க பணம் இல்லாததால் சோமசுந்தரம் செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.