மகளிர் தினத்தை முன்னிட்டு தாய்-மகள் ஆனிபடுக்கையில் யோகா செய்து விழிப்புணர்வு
மகளிர் தினத்தை முன்னிட்டு தாய்-மகள் ஆனிபடுக்கையில் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை
மத்திய அரசின் நேரு யுவகேந்திரா, திருவண்ணாமலை விவேகானந்தர் மகளிர் நற்பணி மன்றம் இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள உதவும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் நடத்தியது.
இதில், சென்னையை சேர்ந்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனா மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் அவரது மகள் வர்ஷினி (வயது 12) ஆகியோர் பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆனிபடுக்கையில் அமர்ந்து மற்றும் படுத்து யோகாசனங்கள் செய்தனர்.
அவர்கள் பத்மாசனம், யோகமித்ரா, பவளமுத்தாசனம், தாடாசனம், பர்வதாசனம் உள்ளிட்ட 26 வகையான யோகாக்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது ஒவ்வொரு யோகாசனம் செய்யும் போதும் யோகா எவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்று எடுத்துரைக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அமிர்தவர்ஷினி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் ஷீலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சித்ரப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டு யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காஞ்சனா மற்றும் வர்ஷினிக்கு நினைவு பரிசு வழங்கினர்.
இதில் யோகா பயிற்சியாளர்கள் மதுராம்பாள், கல்பனா, நேரு யுவகேந்திரா கள கண்காணிப்பாளர் கண்ணகி, சமூக சேவகர்கள் நதியா, மதன்மோகன், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.