சிறுபான்மையினர் தனிநபர், கல்வி கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
சிறுபான்மையினர் தனிநபர் மற்றும் கல்வி கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
சிறுபான்மையினர் தனிநபர் மற்றும் கல்வி கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி கடன்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
ரூ.30 லட்சம் வரை
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரையிலும், சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று உண்மைச்சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது அல்லது சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.