பொதுமக்களை பாதிக்கும் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு

தர்மபுரி பஸ் நிலையம் அருகே பொதுமக்களை பாதிக்கும் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.;

Update:2022-03-08 22:59 IST
தர்மபுரி,:
தர்மபுரி பஸ் நிலையம் அருகே பொதுமக்களை பாதிக்கும் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மதுக்கடை
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெட்டியில் மனுக்களை அளித்தனர். 
தர்மபுரி வியாபாரிகள் அளித்த கோரிக்கை மனுவில், தர்மபுரி பஸ் நிலையம் அருகே அப்துல் முஜிப் தெரு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த வழியாக சென்று வரும் மாணவ-மாணவிகள், பெண்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
வேறு இடத்தில்
இண்டூர் அருகே தளவாய் அள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த  மனுவில், எங்கள் பகுதியில் குறைந்த அளவில் உள்ள புறம்போக்கு நிலத்தை சமுதாயக் கூடம் மற்றும் பொது சுகாதார வளாகம் அமைக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அந்த பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அந்த புறம்போக்கு நிலத்தை வழங்க வேண்டும். மின் நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த கோரிக்கை மனுக்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்