திண்டிவனம் அருகே கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டிவனம் அருகே கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம்
ரேஷன் அரிசி பதுக்கல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு மற்றும் போலீசார், பெலாக்குப்பம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் எதிரே உள்ள கொட்டகையில் 21 சாக்கு மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
பறிமுதல்
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திண்டிவனம் அவரப்பாக்கம் தாடிகாரன் குட்டை வீதியை சேர்ந்த சிவப்பிரகாசம் (வயது 55) என்பவர், திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து அவற்றை விழுப்புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக சிவப்பிரகாசம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.