‘பெண்கள் நாட்டின் போற்றுதலுக்கு உரியவர்கள்’ மகளிர் தினவிழாவில் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பேச்சு
பெண்கள் நாட்டின் போற்றுதலுக்கு உரியவர்கள் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த மகளிர் தின விழாவில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பேசினார்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் மாவட்ட காவல்துறை சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கினார். பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா, இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, பிரபாவதி, இளவழகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வரவேற்றார்.
விழாவில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்தினி, அரசு டாக்டர் எழிலரசி ஆகியோர் கலந்து கொண்டு, மகளிருக்கான உரிமைகள் மகளிரின் சிறப்புகள் குறித்து பேசினார்.
போற்றுதலுக்கு உரியவர்கள்
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பேசுகையில், உலக மகளிர் தின விழாவில், பெண்களை போற்றுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதை நான் பெருமையாக கருதுகிறேன். பெண்களுக்கு இரு இதயங்கள் உண்டு.
அது எப்போது என்றால், பெண்கள் கருவற்று இருக்கும் போது கருவில் உள்ள குழந்தைக்கு ஒரு இதயமும், கருவை சுமக்கும் தாய்க்கு ஒரு இதயம் என்று இரண்டு இதயங்களை அவர்கள் கொண்டு இருப்பார்கள்.
ஏன் மொழிக்கு கூட தொய் மொழி என்று தான் குறிப்பிடுகிறோம். அதேபோல் தாய் நாடு என்றுதான் அழைக்கிறோம். எங்கேயும் தந்தை நாடு, தந்தை மொழி என்று அழைப்பதில்லை. நாட்டில் முக்கியமான நீர் ஆதராமாக இருக்கும் ஆறுகள் கூட பெண்களின் பெயரையே கொண்டு அழைக்கிறோம். அதனால் தான், பெண்கள் நாட்டின் போற்றுதலுக்கு உரியவர்கள் என்கிறோம்.
கஷ்டங்களை மறந்து கொண்டாடுங்கள்
உறவு என்பது தொப்புள் கொடி உறவு மட்டும் தான் உறவு. மற்ற எந்த உறவும் உறவு கிடையாது. சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவுகள் என்று எது, எது நமக்கு தேவையோ அதை நாம் சொந்தமாக்கி கொள்கிறோம். தாய் இறந்தால் ஒரு ஆண் மகன் கூட அனாதையாகிவிடுவான்.
பெண்கள் பலர் தங்கள் வாழ்நாளில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கவும் செய்கிறார்கள். அதனால் உலகமெங்கும் உள்ள பெண்கள் அனைவரும் கஷ்டத்தை மறந்து கொண்டாடும் வகையில் உலக மகளிர் தினவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது என்றார் அவர்.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட பெண்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் 200-க்கும் மேற்பட்ட மகளிர் போலீசார் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மகளிர் போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஜய் கார்த்திக்ராஜா, சுப்ராயன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் துணை சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் விஜி, சூர்யா மற்றும் 200-க்கும் மேற்பட்ட மகளிர் போலீசார் கலந்து கொண்டனர்.
முடிவில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா நன்றி கூறினார்.