திண்டிவனத்தில் ரூ 8 கோடியில் ரெயில்வே மேம்பாலம் புனரமைக்கும் பணி அமைச்சர் செஞ்சிமஸ்தான் தொடங்கி வைத்தார்
திண்டிவனத்தில் ரூ 8 கோடியில் ரெயில்வே மேம்பாலம் புனரமைக்கும் பணி அமைச்சர் செஞ்சிமஸ்தான் தொடங்கி வைத்தார்
திண்டிவனம்
திண்டிவனத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்டது. 20 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை ரூ.8 கோடியே 13 லட்சம் செலவில் புனரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் ரமணன், நகராட்சி ஆணையர் சவுந்தர்ராஜன் மற்றும் கவுன்சிலர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலத்தை புதுப்பிக்கும் பணி 18 மாதங்களில் முடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் ஒவ்வொரு பக்கமும் பணி நடைபெறும் போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதலில் திண்டிவனம்- சென்னை மேம்பால பகுதியில் பணிகள் நடைபெற உள்ளதால் புதுச்சேரியில் இருந்து செஞ்சி, திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு, கிடங்கல் பகுதி, நேரு வீதி வழியாக செல்ல வேண்டும். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்கள் பழைய நிலையிலேயே செல்லலாம். விழுப்புரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரோடு வழியாக செல்லவேண்டும். செஞ்சி, திருவண்ணாமலை பகுதியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் செஞ்சி பஸ் நிறுத்தம், சலவாதி சாலை வழியாக செல்ல வேண்டும். விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.