உக்ரைனில் உணவு, தண்ணீரின்றி தவித்தேன்
உக்ரைனில் உணவு, தண்ணீரின்றி தவித்தேன் என்று கொடைரோடு திரும்பிய மாணவர் உருக்கத்துடன் கூறினார்
கொடைரோடு:
உக்ரைனில் படித்த மாணவர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் அமிர்தராஜ். கால்நடை டாக்டர். இவரது மனைவி ஸ்டெல்லா மேரி. இவர்களது மகன் சிபில் போஸ்கோ உக்ரைனில் உள்ள ஜெப்ரோசியா மாநில பல்கலைக்கழகத்தில் மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சிபில் போஸ்கோ தாய்நாட்டிற்கு திரும்பிவர முடியாமல் தவித்தார். பின்னர் அவர் பெரும் சிரமங்களுக்கு இடையே நேற்று கொடைேராடுக்கு திரும்பினார்.
தவித்தேன்
இது குறித்து மாணவர் சிபில் போஸ்கோ உருக்கத்துடன் கூறியதாவது:-
ரஷியாவுக்கும்-உக்ரைனுக்கும் இடையே கடந்த 10-நாட்களுக்கும் மேலாக கடுமையான போர் நடந்து வருகிறது. அப்போது நான் உணவு, தண்ணீர், இருப்பிடம் இன்றி தவித்தேன். நாடு திரும்புவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்தும் பலன் அளிக்காத சூழ்நிலை இருந்தது.
இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சி மற்றும் உதவியால் கடந்த வாரம் ஜெப்ரோசியாவிலிருந்து ெரயில் மூலம் ஹங்கேரி நாட்டிற்கு சென்றேன். அங்கிருந்து இந்திய தூதரகம் உதவியால் டெல்லி வந்தடைந்தேன்.
பின்னர் டெல்லியில் இருந்து தமிழக அரசு உதவியால் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து நேற்று காலை எனது வீட்டிற்கு வந்தேன். இங்கு பெற்றோரை பார்த்ததும் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.
தந்தி டி.வி.க்கு நன்றி
கடுமையான போர் சூழலுக்கிடையே பல்வேறு முயற்சி, உதவிகளால் நான் நாடு திரும்பி இருக்கிறேன். குறிப்பாக உக்ரைன் நாட்டில் போரின்போது அங்கிருந்து தந்தி டி.வி.யில் பேட்டி அளித்தேன். இதற்காக தந்தி டி.வி.க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அதுபோல மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உக்ரைனில் இருந்து திரும்பிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து இந்தியாவிலேயே மருத்துவப்படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.