ஊட்டியில் மருத்துவக் கல்லூரி புதிய கட்டிடத்தில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை
ஊட்டி மருத்துவக் கல்லூரி புதிய கட்டிடத்தில் விரைவில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி
ஊட்டி மருத்துவக் கல்லூரி புதிய கட்டிடத்தில் விரைவில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மருத்துவக் கல்லூரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 12-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
நடப்பாண்டில் 150 மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்றது. கடந்த மாதம் 14-ந் தேதி முதல் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.
புதிய கல்லூரி கட்டுமான பணிகள் முடிவடையாததால் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தற்காலிகமாக கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
புதிய கட்டிடம்
அங்கு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடல் கூறியல், உடல் இயங்கியல் உள்ளிட்ட 3 பாடப்பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றனர்.
இதுவரை 130 மாணவர்கள் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து உள்ளனர். மாணவிகள் ஊட்டி மலை மேலிட பயிற்சி முகாமிலும், மாணவர்கள் அரசு கலைக் கல்லூரி விடுதியிலும் தங்கி உள்ளனர்.
புதிய கல்லூரியில் நிர்வாக கட்டிடம் மற்றும் வகுப்பறை கட்டிட பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் புதிய கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது.
இது குறித்து மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி கூறியதாவது:-
விரைவில் வகுப்புகள் தொடக்கம்
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் 127 இடங்கள் தமிழகத்தில் இருந்து நிரப்பப்பட்டது. மீதமுள்ள 23 இடங்கள் அகில இந்திய கோட்டோவுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 11 பேர் சேர்ந்தனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 10 பேர் சேர்ந்தனர். 130 மாணவ-மாணவிகள் சேர்ந்து உள்ளனர். இன்னும் 2 கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
புதிய கட்டிடத்தில் விரைவில் வகுப்புகள் நடக்க உள்ளது. இருப்பினும் அங்கு விடுதி கட்டிட பணிகள் நிறைவடையாததால் மாணவ-மாணவிகள் தற்காலிகமாக தங்குகின்றனர்.
அவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு சென்று வரும் வகையில் அரசு பஸ் இயக்க போக்குவரத்து கழகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தினமும் காலை, மாலை கல்லூரிக்கு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.