தமிழக அரசுக்கு தொலைநோக்கு திட்டம் இல்லை: அண்ணாமலை புகார்

தமிழக அரசுக்கு தொலைநோக்கு திட்டம் இல்லை, என்று பா ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2022-03-08 14:56 GMT
தூத்துக்குடி:
தமிழக அரசுக்கு தொலைநோக்கு திட்டம் இல்லை, என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தூத்துக்குடி எப்போதுமே தேசியத்தை நம்புகிற பகுதி. பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவதற்காக இளைஞர்கள், பெண்கள் அதிகமாக பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர். ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும் ஒரு மாற்றத்தை பார்த்து வருகிறேன்.
மேகதாது அணை
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலை தெளிவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது பற்றி இதுவரை வாயே திறக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க., கர்நாடக காங்கிரஸ் கட்சியின் போக்கை இதுவரை கண்டிக்கக்கூட இல்லை. இது தொடர்பாக ஒருவார்த்தை கூட பேசாத முதல்-அமைச்சராக தமிழக முதல்-அமைச்சர் மாறி இருக்கிறார்.
ரகசிய உறவு
பா.ஜனதாவை பொறுத்தவரை இந்த பிரச்சினையை வலியுறுத்தி தஞ்சையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தோம். எனவே, கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் ரகசிய உறவு இருக்கிறதா?, அதை தி.மு.க ஆமோதிக்கிறதா? என்பதை கேட்க வேண்டும்.
பிரதமர் மோடி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் கொடுக்காத திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்து உள்ளார். தமிழக அரசுக்கு தொலைநோக்கு திட்டம் கிடையாது. எதுவுமே இல்லாமல் அவா்கள் கடைசியாக நம்பியிருப்பது டாஸ்மாக்கை தான். மதுபானங்களின் விலையை உயர்த்தினால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும், அதனால் தலை தப்பிவிடும் என கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அரசை நடத்திவிடலாம் என நம்பிக்கொண்டு இருக்கின்றனர். இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? தமிழக முதல்-அமைச்சர் பொய்யை மட்டுமே கூறிக்கொண்டு ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
உள் விவகாரம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இடம் பெற்றுள்ளது. அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தங்கள் கட்சி விவகாரம் தொடர்பாக அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள். 
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சட்டம் தன் கடமையை செய்து உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்