பெண் மர்மச்சாவு வழக்கில் கணவர் கைது
பெண் மர்மச்சாவு வழக்கில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
அழுகிய நிலையில் பிணம்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள இந்தளூர் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 31). இவருக்கும் மதுராந்தகம் தாலுகா இரும்பேடு கிராமத்தை சேர்ந்த வைத்தீஸ்வரிக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது இதுவரை இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த வைத்தீஸ்வரி (27) உடலை மீட்ட அச்சரப்பாக்கம் போலீசார் தலைமறைவாக இருந்த வைத்தீஸ்வரியின் கணவர் சிலம்பரசனை பிடித்து விசாரித்தனர்.
கைது
விசாரணையில் வைத்தீஸ்வரியை சிலம்பரசன் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. குழந்தை இல்லாததால் டிராக்டரை விற்று கடனை செலுத்தி விட்டு மீதம் உள்ள தொகையில் மருத்துவ செலவு செய்யலாம் என்று கூறிய நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது துப்பட்டாவால் வைத்தீஸ்வரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக சிலம்பரசன் போலீசாரிடம் தெரிவித்தார்.
அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அமல்ராஜ் மற்றும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.