திருடு போன 70 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் திருடு போன 70 செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன

Update: 2022-03-08 13:07 GMT
திண்டுக்கல்:
செல்போன்கள் மீட்பு 
திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் துப்புதுலக்க 7 போலீஸ் உட்கோட்டங்களிலும் தலா ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே செல்போன்கள் காணாமல் போகுதல், செல்போன் திருட்டு குறித்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருடு போன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை கொண்டு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்படி கடந்த சில நாட்களாக 70 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஆகும். இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட 70 செல்போன்களையும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  நடைபெற்றது.
ஒப்படைப்பு 
இதில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். மேலும் திருடர்கள், சமூக விரோதிகள் குறித்து பொதுமக்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும். 

அதேபோல் சமூக விரோதிகள் நடமாட்டம் பற்றியும் தகவல் தெரிவிக்கலாம். அதன்மூலம் குற்றங்களை தடுப்பதில் போலீசாருக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ரெய்கானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்