தூத்துக்குடி ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ6¾ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ 6¾ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்;
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.6¾ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி
கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர், பெரியாபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியராஜ். இவரது மகன் சஜின் (வயது 33). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மணிநகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் தனசெல்வகணேஷ் (34) என்பவர் இலங்கை கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 25 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்து கொடுக்கும் படி கேட்டு உள்ளார்.
ரூ.6¾ லட்சம் மோசடி
இதனையடுத்து சஜின் தனது நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வழியாக 25 டன் வெங்காயத்தை ஒரு கன்டெய்னரில் ஏற்றுமதி செய்து உள்ளார்.
இதைத் தொடர்ந்து தனசெல்வகணேஷ், சஜினுக்கு ரூ.3 லட்சம் மட்டும் கொடுத்து உள்ளார். மீதம் உள்ள ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்துக்கான வங்கி காசோலை கொடுத்து உள்ளார். அந்த காசோலையை தனசெல்வகணேஷ் வங்கியில் செலுத்தியுள்ளார். அப்போது அந்த காசோலையில் பணம் இல்லாமல் மோசடி செய்யப்பட்டது சஜினுக்கு தெரிய வந்துள்ளது.
கைது
இதுகுறித்து சஜின் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வனிதாராணி வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி தனசெல்வகணேசை கைது செய்தார்.