நத்தம் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

நத்தம் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் இறந்தார். இருவரது உடல்களும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

Update: 2022-03-08 12:53 GMT
செந்துறை:
மகன் சாவு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பன்னியாமலையை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி மருந்தியம்மாள் (வயது 69). இவர்களது மகன் சிவக்குமார் (49). இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 

சிவக்குமாருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதற்காக இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்து விட்டார். 
அதிர்ச்சியில் தாய் சாவு
இதுகுறித்த தகவல் வீட்டில் இருந்த மருந்தியம்மாளுக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். இந்தநிலையில் சிவக்குமாரின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது உடலை பார்த்து மருந்தியம்மாள் அழுது புரண்டார். 

பின்னர் சிறிதுநேரத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை தூக்கிய போது பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். இதையடுத்து உறவினர்கள் மருந்தியம்மாளை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். 

இதைத்தொடர்ந்து தாய், மகன் இருவரின் உடல்களும் ஒரே வீட்டில் வைக்கப்பட்டது. உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர்  இருவரது உடல்களும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
மகன் இறந்த சிறிது நேரத்தில் தாயும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்