காங்கேயம் நகராட்சி துணைத்தலைவர் ராஜினாமா

காங்கேயம் நகராட்சி துணைத்தலைவர் ராஜினாமா;

Update: 2022-03-08 11:58 GMT
ிருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து நகராட்சி துணை தலைவர் பதவிக்கு அதிகார பூர்வ வேட்பாளராக 16வது வார்டில் வெற்றி பெற்ற ர.கமலவேணியை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது.  
அதன்படி துணைத்்தலைவர் தேர்தலின் போது  தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ர.கமலவேணி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவரை எதிர்த்து தி.மு.க. 4வது வார்டு கவுன்சிலர் அ.இப்ராகிம் கலிலுல்லா, தி.மு.க. 8வது வார்டு கவுன்சிலர் கு.வளர்மதி ஆகியோர் போட்டியிட்டனர். மறைமுக தேர்தலின் போது 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதில் அ.இப்ராகிம் கலிலுல்லா 12 வாக்குகள் பெற்று நகராட்சி துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கு.வளர்மதி 3 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். கட்சி அறிவித்திருந்த வேட்பாளர் ர.கமலவேணி ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
ராஜினாமா
இதையடுத்து தி.மு.க. தலைமை அறிவித்திருந்த வேட்பாளருக்கு பதிலாக வேறு வேட்பாளர் நிறுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் பதவி விலக வேண்டும் என தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது. மேலும் கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.வினர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த இடங்களிலும் பதவி விலக வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தி.மு.க. தலைமையின் அறிவிப்புக்கு மாறாக காங்கேயம் நகராட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இப்ராகிம் கலிலுல்லா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தை காங்கேயம் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான எஸ்.வெங்கடேஸ்வரனிடம் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று கொடுத்தார். அப்போது தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியைச்சேர்ந்த கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து அ.இப்ராகிம் கலிலுல்லா கூறும்போது கட்சியின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு காங்கேயம் நகர்மன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளேன். கவுன்சிலராக இருந்து எனது மக்கள் பணியைத் தொடர்ந்து செய்வேன்என்றார்.

மேலும் செய்திகள்