கலெக்டர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு கொடுத்த பொதுமக்கள்

சுடுகாடு வசதி கேட்டு தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நூதன முறையில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2022-03-07 22:50 GMT
தென்காசி:
ெதன்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா கட்டுப்பாடு மற்றும் தேர்தல் காரணமாக இந்த கூட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். பொதுமக்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம் 272 மனுக்கள் பெறப்பட்டன. சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர் அருகே உள்ள புன்னைவனபேரி அருந்ததியர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பேச்சியப்பன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “எங்களது பகுதியில் சுடுகாடு வசதி இல்லை. கடந்த 25-ந் தேதி ஒருவர் இறந்ததால் அவரது உடலை அடக்கம் செய்ய அருகிலுள்ள ஒரு சுடுகாட்டிற்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவே உடலை அடக்கம் செய்ய முடியாமல் அதே பகுதியில் ஓரமாக ஒரு இடத்தில் அடக்கம் செய்தோம். எனவே எங்களுக்கு சுடுகாடு வசதி செய்து தர வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, இந்த மனுவை கொண்டு வந்தவர்களில் சிலர் நூதன முறையில் அதாவது உடலில் விபூதி பூசி, இறந்தவரின் உடலை தகனம் செய்ய செல்லும்போது கொண்டு செல்லும் தீச்சட்டியை கையில் வைத்து ஊர்வலமாக வந்தனர். 

மேலும் செய்திகள்