கைதிகளால் விளைவித்த தர்ப்பூசணி பழங்கள் விற்பனை
மதுரை மத்திய சிறை அங்காடியில் கைதிகளால் விளைவித்த தர்ப்பூசணி பழங்கள் விற்பனை செய்யப்பட்டது.
மதுரை,
மதுரை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கைதிகளால் இனிப்பு வகைகள், மரசாமான்கள், சிமெண்ட் தொட்டிகள். சிலாப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு சிறை வளாகத்திற்கு முன்பு உள்ள அங்காடியில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மதுரை மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் 84 ஏக்கரில் திறந்தவெளி சிறைசாலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தென்னை, வாழை போன்றவற்றை விளைவித்து விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும் தற்போது கோடை காலம் என்பதால் தர்ப்பூசணி பழங்களை விளைக்க கைதிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு 2 டன் தர்ப்பூசணி பழங்கள் விளைவிக்கப்பட்டு அது மதுரை மத்திய சிறை அங்காடியில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விலை வெளிமார்கெட்டை காட்டிலும் 30 முதல் 40 சதவீதம் குறைவாக உள்ளது. எனவே அதனை பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர்.