மேச்சேரி அருகே மரத்தில் வேன் மோதி பெண்கள் உள்பட 16 பேர் காயம்
மேச்சேரி அருகே மரத்தில் வேன் மோதி பெண்கள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர்.
மேச்சேரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் தர்மபுரி பகுதிகளை சேர்ந்த 31 பேர் ஒரு வேனில் ராமேசுவரம், பழனி பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஊத்தங்கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வேனை பாலக்கோடு பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள திமிரிகோட்டை பகுதியில் வேன் சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
விபத்தில் வேன் டிரைவர் சங்கர், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த அனந்தலட்சுமி (55), கஸ்தூரி (45), விமல பிரியா (21), ஜெயலட்சுமி (29), தர்மபுரி பகுதியை சேர்ந்த நாகலட்சுமி (60), சசிகலா (35), மைதிலி (29), ஜீவானந்தம் (13), ஈஸ்வரமூர்த்தி (12), கிேஷார்குமார் (20), சுரேந்தர் (33) மற்றும் சிறுவர்கள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேன் மோதிய மரத்தின் அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. தவறி வேன் டிரான்ஸ்பார்மரில் மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.