கருப்பூர் அருகே லாரி டிரைவரை கடத்தி பணம் கொள்ளை-4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

கருப்பூர் அருகே லாரி டிரைவரை கடத்தி பணத்தை கொள்ளையடித்த 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-03-07 21:31 GMT
கருப்பூர்:
கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40), லாரி டிரைவர். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார், இவருடைய வீட்டுக்கு 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்தது. உடனே அவர்கள் அன்பழகனை மிரட்டி கத்திமுனையில் ரூ.22 ஆயிரம் மற்றும் ¼ பவுன் நகை உள்பட வெள்ளி பொருட்களை பறித்துக் கொண்டனர். மேலும் ரூ.5 லட்சம் கேட்டு காரில் கடத்திக்கொண்டு, கன்னங்குறிச்சி பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு அவரது முதுகில் கத்தியால் குத்தி உள்ளனர். மேலும் பணம் தரவில்லை என்றால் கொன்றுவிடுவதாகவும் அந்த கும்பல் மிரட்டி உள்ளது. இதனால் அச்சம் அடைந்த அன்பழகன், தனது நண்பர்கள், சகோதரியிடம் பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். இதன்படி அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை ரூ.5 ஆயிரம் பெற்றுக்கொண்ட அந்த கும்பல், அன்பழகனை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து கத்திக்குத்தில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா உள்பட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே அன்பழகனை கடத்திய 4 பேர் கொண்ட கும்பலில் பிரபல ரவுடி ஒருவரும் உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்