உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதற்கு உதவிய இந்திய ராஜதந்திரம்; மத்திய மந்திரி மீனாட்சி லேகி பேச்சு

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதற்கு இந்திய ராஜதந்திம் உதவி புரிந்துள்ளதாக மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறியுள்ளார்.

Update: 2022-03-07 21:10 GMT
பெங்களூரு:

இந்திய மாணவர்கள்

  இந்திய குளோபல் அமைப்பு சார்பில் உலக ராஜதந்திர முகம் மாற்றம் என்ற பெயரில் ஆண்டு மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்துகொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

  ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது இன்றைய காலக்கட்டத்தில் இது மிகப்பெரிய மீட்பு பணி ஆகும். உக்ரைனில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மத்திய அரசு மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது.

ராஜதந்திரம்

  மாணவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள மாணவர்கள் உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா, ஸ்லாவகியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கிருந்து மாணவர்கள் தாய்நாட்டிற்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள். 10 முதல் 15 விமானங்களில் மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

  உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை பத்திரமாக அழைத்து வருவது அரசின் கடமை என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. மாணவர்களை மீட்பதில் எங்களின் அனைத்து நண்பர்களும் உதவுகிறார்கள். அதனால் தான் இந்தியாவின் ராஜதந்திரம் நமக்கு உதவுகிறது. முன்பு எல்லாம் ராஜதந்திரம் கதவுகள் பூட்டப்பட்ட அறைக்குள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று அது பொதுவெளியில் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படுகிறது. நமது நன்மையாக்க சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகிறோம்.

எச்சரிக்கை

  அரசு ஆலோசனைகள், எச்சரிக்கைகளை வழங்கினால், அதை நாம் உடனடியாக சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறோம். அது பாதிக்கப்பட்டுள்ள மக்களை போய் சென்றடைகிறது. அவர்களும் உடனடியாக அரசை தொடர்பு கொண்டு தங்களின் கவலையை தெரிவிக்கிறார்கள். 

ஆனால் சமூக வலைத்தில் பொய்யான, போலியான செய்திகளும் பரப்பப்படுகின்றன. அதன் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  இவ்வாறு மீனாட்சி லேகி பேசினார்.

மேலும் செய்திகள்