தாய்நாடு திரும்பிய மாணவர்கள் மருத்துவ கல்வி தொடர மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; குமாரசாமி வலியுறுத்தல்
உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்பிய மாணவர்கள் மருத்துவ கல்வி தொடர மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.;
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய மாணவர்கள்
போர் நடைபெறும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வந்தது நல்ல விஷயம். ஆனால் படிப்பை பாதியிலேயே விட்டு வந்துள்ள அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக உள்ளது. அந்த மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு சென்று படிப்பை தொடர்வது என்பது சாத்தியமில்லை. அங்கு கல்லூரிகள் அழிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
கர்நாடகத்தை சோந்த ஆயிரம் பேர் உள்பட 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாய் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர் கடன் வாங்கி குழந்தைகளை உக்ரைனில் படிக்க வைத்தனர். போர் காரணமாக அவர்களின் கல்வி எதிர்காலம் நிலையற்றதாக மாறியுள்ளது. அவர்களின் கல்வி எதிர்காலத்தை உறுதி செய்யும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
நுழைவு தேர்வு
கர்நாடகத்தில் 50 முதல் 60 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அந்த மாணவர்களுக்கு நுழைவு தேர்வு வைத்து ஒவ்வொரு கல்லூரியில் 10 மாணவர்களை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தின் பட்ஜெட் ரூ.2.65 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ரூ.100 கோடி செலவு செய்வது அரசுக்கு கஷ்டமா?. அந்த மாணவர்களின் கல்வி செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கட்டும்.
கல்விக்கு கட்டணத்தை நிர்ணயித்து அதை விற்பதை நிறுத்த வேண்டும். தாய்நாடு திரும்பிய அந்த மாணவர்கள் தங்களின் மருத்துவ கல்வியை தொடர மத்திய-மாநில அரசுகள் உடனடியாக இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.