திம்பம் மலைப்பாதையில் தலைகுப்புற கவிழ்ந்த காய்கறி வேன்; டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்
திம்பம் மலைப்பாதையில் காய்கறி ஏற்றிவந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
சத்தியமங்கலம்
திம்பம் மலைப்பாதையில் காய்கறி ஏற்றிவந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பாதை. தமிழக-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இந்த மலைப்பாதை இருப்பதால் எப்போதும் கார், பஸ், வேன் என வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.
திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அதிக பாரங்கள் ஏற்றிவரும் லாரிகள், வேன்கள் கொண்டை ஊசி வளைவுகளை கடக்க முடியாமல் கவிழ்ந்துவிடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
தலைகுப்புற கவிழ்ந்தது
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து தக்காளி, வெங்காயம் மற்றும் பல்வேறு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கேரளாவுக்கு புறப்பட்டது. நேற்று முன்தினம் மாலை அந்த வேன் திம்பம் மலைப்பாதையில் வந்துகொண்டு இருந்தது.
கேரள மாநிலம் கண்ணனூரை சேர்ந்த ஹரிகுமார் (வயது 55) என்பவர் வேனை ஓட்டினார். 5-வது கொண்டை ஊசி வளைவை வேன் கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.
உயிர் தப்பினார்...
வேன் கவிழ்ந்தால் காய்கறிகள் மலைப்பாதையில் சிதறின. இந்த விபத்தில் டிரைவர் ஹரிகுமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஹரிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.
மேலும் கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த வேன் மீட்கப்பட்டது. ரோட்டின் ஓரப்பகுதியில் வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.