கார்களை திருடிய வழக்கில் தமிழக வாலிபர்கள் 3 பேர் கைது; ரூ.1½ கோடி வாகனங்கள் மீட்பு
பெங்களூருவில் கார்களை திருடி விற்ற வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி கார்கள் மீட்கப்பட்டுள்ளன.;
பெங்களூரு:
தமிழகத்தை சேர்ந்த 3 வாலிபர்கள்
பெங்களூரு பேகூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும், பெங்களூரு உள்பட மாநிலத்தில் பிற பகுதிகளிலும், கேரளாவிலும் கார்களை திருடி விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தார்கள்.
பெங்களூருவில் திருடும் கார்களின் என்ஜின் மற்றும் பதிவெண் பலகைகளை மாற்றி விற்பனை செய்து வந்துள்ளனர். அதாவது ஏதாவது ஒரு வாகனம் விபத்தில் சிக்கி நிறுத்தப்பட்டு இருந்தால், அந்த வாகனத்தின் பதிவெண் பலகையை, என்ஜினை எடுத்து திருட்டு கார்களுக்கு பயன்படுத்தி 3 பேரும் விற்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
ரூ.1½ கோடி கார்கள் மீட்பு
இதற்கு முன்பு சென்னையை சேர்ந்த வாலிபர், பெங்களூருவில் இருசக்கர வாகனங்களை திருடியதாக சிக்கி இருந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த 3 வாலிபர்களையும் கைது செய்திருப்பதாக பேகூர் போலீசாா் தெரிவித்துள்ளனர்.
கைதான 3 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் திருடிய 6 சொகுசு கார்கள் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 55 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 3 பேர் மீதும் பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.