நாடகமாடிய உறவினர் வாலிபர் உள்பட 3 பேர் கைது

வீடு புகுந்து 18 பவுன் நகை கொள்ளை போன விவகாரத்தில் நாடகமாடிய உறவினர் வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-03-07 20:52 GMT
காரைக்குடி,

வீடு புகுந்து 18 பவுன் நகை கொள்ளை போன விவகாரத்தில் நாடகமாடிய உறவினர் வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட குருங்களூர் அருகே உள்ள மதகத்தை சேர்ந்தவர் லதா(வயது 46). இவர் தற்போது காரைக்குடி சூடாமணிபுரம் பாண்டிகோவில் தெருவில் வசித்து வருகிறார். இவரது மகள் சசி, சிங்கப்பூரில் வேலை பார்த்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த கந்தா்வகோட்டை தாலுகா ஆண்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்த தெய்வராஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். 
இதையடுத்து சசியை திருமணம் செய்வதாக கூறிய தெய்வராஜ் அவரிடம் இருந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்தை பெற்றுக்கொண்டு கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சசி, பணம் மற்றும் நகைகளை தெய்வராஜிடம் திரும்பி கேட்டபோது நகையை மட்டும் அவர் திருப்பி கொடுத்துள்ளார். மேலும் பணத்தையும் தந்து விடுவதாக சசியின் உறவினர் பூபதியிடம் கூறியுள்ளார்.
 
3 பேர் கைது

இந்தநிலையில் சசியின் வீட்டிற்குள் 2 பேர் புகுந்து அங்கிருந்த சசியின் தாயார் லதா மற்றும் அவரது உறவினர் பூபதி ஆகியோரை வாள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி விட்டு பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மேலும் லதா மற்றும் அவரது தாய் கருப்பாயி அணிந்திருந்த 18 பவுன் நகைகளையும் பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறும் பூபதி(வயது 20) என்பவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனான தகவல்களை கூறினார். இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக சோதனை நடத்திய போது பூபதி ஆதரவுடன் காரைக்குடி அருகே புதுவயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து நகைகளை பறித்துக்கொண்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து காரைக்குடி வடக்கு போலீசார், 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்