சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- இளையான்குடி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளையான்குடி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இளையான்குடி,
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளையான்குடி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
யூனியன் கூட்டம்
இளையான்குடி யூனியன் கூட்டம் அதன் தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடந்தது.
கூட்டத்தில் கவுன்சிலர் பெருமச்சேரி முருகன் பேசும்போது, அங்கன்வாடி மையத்தில் முறைகேடுகள் செய்த நபரை மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்தி அதிகாரிகள் தவறு செய்கின்றனர். மேலும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பழுதடைந்துள்ளது. அருகில் பள்ளி குழந்தைகள் விளையாடும் இடம் உள்ளதால் விரைவாக அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். ஒன்றிய குழு நிதியை இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டதை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அடிப்படை வசதி
கவுன்சிலர் சீமைச்சாமி: எனது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதி தேவைகளை பொதுமக்களுக்கு பூர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
கவுன்சிலர் முருகானந்தம்: மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட செலவினங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதிகாரிகள் மெத்தனமாக தங்கள் பணிகளை செய்கின்றனர்.
மேலும் மராமத்து பணி செய்ய அனைத்துத்துறையிலும் அனுமதி பெற்ற பின்பும் பொதுப்பணித்துறை அனுமதி கிடைக்காமல் மக்கள் நலத்திட்ட பணிகளை செய்ய முடியாமல் கிடப்பில் உள்ளது. பணியாளர்கள், ஒப்பந்ததாரர்களிடம் வசூல் செய்யும் ஜி.எஸ்.டி., வருமான வரி போன்ற வரவுகளை முறையாக அரசிடம் செலுத்தாமல் வேறுவகையில் செலவழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்ற தீர்மானத்தில் தெளிவான செலவினங்களை குறிப்பிட வேண்டும்.
நடவடிக்கை இல்லை
கவுன்சிலர் கீர்த்தனா கனகராஜ்: தொண்டையூரில் பயணியர் நிழற்குடை அமைத்து தரவும், திருவள்ளூரில் இருந்து புதூர் செல்லும் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து தரவும் வேண்டும்.
கவுன்சிலர் சண்முகம் எனது வார்டு பகுதியில் உள்ள சாலைகள் பல வருடங்களாக சேதமடைந்துள்ளது. பராமரிக்க கேட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பணிகள் வழங்குவதில் பாரபட்சமாக வேண்டியவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது.
யூனியன் துணைத்தலைவர் தனலட்சுமி: ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை தேவை. ஒவ்வொரு கூட்டம் முடிந்து மறு கூட்டம் நடத்தும்போது ஆணையாளர் மாற்றப்பட்டு இருப்பதால் அனைத்து உறுப்பினர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். நிரந்தரமான ஆணையாளரை நியமித்து ஒன்றிய நிர்வாகம் சிறப்புடன் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிவில் யூனியன் தலைவர் முனியாண்டி நன்றி கூறினார்.