அ.தி.மு.க.வினர் ஆதரவோடு வெற்றிபெற்ற பேரூராட்சி தலைவருக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு

அ.தி.மு.க.வினர் ஆதரவோடு வெற்றிபெற்ற பேரூராட்சி தலைவருக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தொிவித்ததால் போலீசாா் குவிக்கப்பட்டனா்.

Update: 2022-03-07 20:46 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  தி.மு.க. வேட்பாளர்கள் 7 பேரும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 7 பேரும் வெற்றி பெற்றார்கள். சுயேச்சையாக போட்டியிட்ட ஒருவர் வெற்றிபெற்றார். 
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் கவுன்சிலர் என்.பி.கண்ணன் பேரூராட்சி தலைவருக்கு தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டார். ஆனால் தி.மு.க.வை சேர்ந்த ராகினி என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் வாக்களிக்க ராகினி வெற்றிபெற்றார். மேலும் துணைத்தலைவராக ராகினியின் ஆதரவோடு அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் வெற்றி பெற்றார்.
மேலும் வெற்றி பெற்ற ராகினி நேற்று முதல்முறையாக நெரிஞ்சிபேட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு தனது பொறுப்புகளை கவனிப்பதற்காக போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் பரவியது. இதையடுத்து அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்