கோலார் தங்கவயலில் உள்ள லட்சுமி வெங்கடரமணா கோவில் பிரம்மோற்சவம்; வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது
கோலார் தங்கவயலில் உள்ள லட்சுமி வெங்கடரமணா கோவில் பிரம்மோற்சவம் வருகிற 12-ந்தேதி தொடங்கி 24 வரை நடக்கிறது.
கோலார் தங்கவயல்:
லட்சுமி வெங்கடரமணா கோவில்
கோலார் தங்கவயலில் பிரசித்தி பெற்ற லட்சுமி வெங்கடரமணா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பிரம்மோற்சவம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ெகாேரானா ஊரடங்கு காரணமாக பிரம்மோற்சவம் நடக்கவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால், பிரம்மோற்சவத்தை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி இந்தாண்டு லட்சுமி வெங்கடரமணா கோவில் பிரம்மோற்சவம் வருகிற 12-ந் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுபற்றி கோலார் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா கூறியதாவது:-
முன்னேற்பாடுகள் நடக்கிறது
கோலார் தங்கவயலில் லட்சுமி வெங்கடரமணா சாமி கோவில் பிரம்மோற்சவம் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழாவில் நடக்கும் புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக திருவிழா நடைபெறவில்லை. கோவில் வளாகத்திலேயே தேரோட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்தாண்டும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர் திருவிழா நடத்தப்படும். இதற்காக கோவிலில் முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.