“குண்டு சத்தங்களுடன் 12 கிலோ மீட்டர் நடந்து ருமேனியா எல்லைக்கு சென்றோம்”-உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மாணவர் பேட்டி

“குண்டு சத்தங்களுடன் 12 கிலோ மீட்டர் நடந்து ருமேனியா எல்லைக்கு சென்றோம்”-உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மாணவர் பேட்டி

Update: 2022-03-07 20:38 GMT
பனைக்குளம்
“குண்டு சத்தங்களுடன் 12 கிலோ மீட்டர் நடந்து ருமேனியா எல்லைக்கு சென்றோம் என உக்ரைன் நாட்டில் இருந்து மண்டபம் திரும்பிய மாணவர் கூறினார்.
மாணவருக்கு வரவேற்பு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நவாஸ் அலி. இவரது மகன் முஹம்மது ஆதீம்(வயது 21) உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் மிட் லேவ் நகரில் உள்ள கருங்கடல் தேசிய பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் மருத்துவ மாணவர் முகமது ஆதீமின் பெற்றோர் கவலை அடைந்து தனது மகனிடம் அவ்வப்போது வீடியோகால் மூலம் பேசி வந்தனர். இந்தநிலையில் உக்ரைனில் இருந்து  ருமேனியா எல்லை வந்து அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார். பின்னர் சென்னை வந்து சொந்த ஊரான அழகன்குளத்திற்கு நேற்று வந்து சேர்ந்தார். 
அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதன்படி அழகன்குளம் முஸ்லிம், இந்து சமூகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் ஆரத்தி எடுத்து கட்டித்தழுவி வரவேற்றனர். பின்னர் மாணவர் முகமது ஆதீம் கூறும்போது, உக்ரைன் நாடு முழுவதும் குண்டு மழை பொழிந்த வண்ணமாக இருக்கிறது. 
குண்டு சத்தம்
நாங்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் அருகே குண்டுகளின் சத்தம் எங்களை அச்சத்தில் உருக்கின. இந்தநிலையில் எப்போது நாங்கள் சொந்த ஊருக்கு செல்வோம் என்ற ஏக்கத்தில் ஆவலோடு காத்திருந்த நிலையில் இந்தியர்கள் சுமார் 260 பேர் தங்கியிருந்த இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் குண்டு சத்தம் வருவதை கூட அச்சம் கொள்ளாமல் நடந்து சென்று, உக்ரைன் நாட்டின் எல்லையை கடந்து ருமேனியா நாட்டிற்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் பதுங்கு குழிகளில்இருந்தபோது குடிநீரும் இல்லை. உணவும்     கிடையாது. இதனால் பட்டினியாகவும் இருந்தோம். மேலும் நாங்கள் இருந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தகவல்தொடர்பு  இல்லாமல் இருந்தோம். இன்னும் அங்குள்ள மாணவர்களை உடனடியாக அழைத்து வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, அவர்களை காப்பாற்ற வேண்டும்.. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்