கல்லல்,
கல்லல் அருகே காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கத்தப்பட்டு சொக்கநாதபுரம் சேவுகபெருமாள் அய்யனார் கோவில் மகா சிவராத்திரி விழா மற்றும் சந்தனகுட விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் சொக்கநாதபுரம்-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 42 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது.முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை மாத்தூர் சேரன் செங்குட்டுவன் மற்றும் ஆனையூர் செல்வம் வண்டியும், 2-வது பரிசை கண்டனிப்பட்டி ராஜகண்ணப்பன் வண்டியும், 3-வது பரிசை சொக்கநாதபுரம் பாலு வண்டியும், 4-வது பரிசை நகரம்பட்டி கண்ணன் வண்டியும், 5-வது பரிசை கொடிக்குளம் கவுதம் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 27 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் விஜயவேல் வண்டியும், 3-வது பரிசை பரவை சீலக்காரி அம்மன் மற்றும் தானாவயல் வெங்கடாச்சலம் வண்டியும், 4-வது பரிசை பூக்கொல்லை ரித்தீஸ் வண்டியும், 5-வது பரிசை ஆனையூர் செல்வம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.