மாயமான கல்லூரி மாணவி எரித்து கொலை; காதலனுக்கு வலைவீச்சு
மண்டியா அருகே மாயமானதாக தேடப்பட்ட கல்லூரி மாணவி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மண்டியா:
கல்லூரி மாணவி மாயம்
மண்டியா மாவட்டம் மலவள்ளி டவுனை சேர்ந்தவர் ஹேமாவதி. இவரது மகள் யுக்தி(வயது 18). இவர், மலவள்ளியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.யூ. படித்து வந்தார். இவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் சிறுவயது முதலே தாயின் அரவணைப்பில் யுக்தி வளர்ந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி யுக்தி கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதனால் தாய் ஹேமாவதி மற்றும் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் யுக்தியை தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் யுக்தி கிடைக்கவில்லை. இதையடுத்து மலவள்ளி போலீசில் மகள் யுக்தி மாயமாகிவிட்டதாக ஹேமாவதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி யுக்தியை தேடினர்.
எரித்து கொலை
இந்த நிலையில் ஜனவரி 23-ந் தேதி மலவள்ளி அருகே நீலகிரி தோப்பில் இளம்பெண் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதையறிந்த மலவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையான இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் சந்தேகத்தின் பேரில் யுக்தி தாய் ஹேமாவதியை அடையாளம் காண்பிக்க அழைத்து வந்தனர். அதில் இளம்பெண்ணின் கொலுசு, மோதிரம் உள்ளிட்டவற்றை அடையாளம் வைத்து யுக்தி தான் என்று உறுதி செய்து கதறி அழுதார். இதைதொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
காதலனுக்கு தொடர்பா?
அதில் யுக்தியும், சசிக்குமார் என்ற வாலிபரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், காதலன் சசிக்குமாரிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு தேடி சென்றனர். ஆனால் வீட்டில் சசிக்குமார் இல்லை. அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் வேறு ஏதேனும் பிரச்சினையில் சசிக்குமாரே, காதலி யுக்தியை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து மலவள்ளி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சசிக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால் தான் யுக்தி கொலை வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும். ஆனால் 40 நாட்கள் ஆகியும் யுக்தி கொலை வழக்கில் தொடர்புடைய காதலன் சசிக்குமாரை இன்னும் கைது செய்யவில்லை.
போராட்டம்
இதனால் யுக்தி கொலை செய்யப்பட்டு 40 நாட்கள் ஆகியும் அதில் தொடர்புடைய காதலன் சசிகுமாரை கைது செய்யாததை கண்டித்து உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி ஊர்வலமாக சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.