திருமண வீட்டில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி சாவு

மதுரையில் திருமண வீட்டில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

Update: 2022-03-07 20:31 GMT
மதுரை,

மதுரையில் திருமண வீட்டில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

7-ம் வகுப்பு மாணவர்

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் சுரேஷ். வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருடைய மகன் ஏழுமலை (வயது 12). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சுரேஷ் வீட்டின் அருகே வசிப்பவர் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அந்த வீட்டின் முன்பாக பந்தல் மற்றும் மின்விளக்குகள் போடப்பட்டு இருந்தன. 
 சம்பவத்தன்று ஏழுமலை வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அவன் எதிர்பாராத விதமாக பந்தல் போடப்பட்டு இருந்த இரும்பு கம்பியை தொட்டுள்ளான். 

மின்சாரம் தாக்கி பலி

அப்போது மின்சாரம் தாக்கியதில் ஏழுமலை தூக்கி வீசப்பட்டான். உயிருக்கு ஆபத்தான நிலையில இருந்த அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
பின்னர் இது தொடர்பாக சிறுவனின் தந்தை சுரேஷ் கீரைத்துறை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பந்தல் போடும்போது அலட்சியமாக செயல்பட்டதாக அபிஷேக், முருகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்