தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). அதே பகுதியில் வசித்து வருபவர் சாமிதுரை(57). இருவருக்கும் இடையே, இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இடப்பிரச்சினை சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது கணேசன் மற்றும் அவரது மனைவி இந்திராணியை, சாமிதுரை மற்றும் அவரது மகன் மாசிலாமணி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி இரும்புகம்பி மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதேபோல, மாசிலாமணியை, கணேசன் மற்றும் அவரது மனைவி இந்திராணி மற்றும் அவர்களது மகன், மகள்கள் தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின்பேரில் சாமிதுரை, மாசிலாமணி ஆகியோர் மீதும், மாசிலாமணி கொடுத்த புகாரின்பேரில் கணேசன், இந்திராணி, சரவணகுமார், திவ்யா ஆகியோர் மீதும் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.