விதவை பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; மைசூரு கோர்ட்டு தீர்ப்பு
விதவை பெண்ணை கற்பழித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மைசூரு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
மைசூரு:
விதவை பெண் கற்பழிப்பு
மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா சாலிகிராமத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். கணவரை இழந்து விதவையாகி தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பெண்ணுடன் அதேப்பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(வயது 30) என்பவர் பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைதொடர்ந்து ரவிக்குமார், பெண்ணிடம் திருமணம் ஆசைவார்த்தைகள் கூறி கற்பழித்துள்ளார்.
இதையடுத்து சில நாட்களில் பெண், ரவிக்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் ரவிக்குமார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் கற்பழித்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என்று பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், சாலிகிராமம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை மைசூரு மாவட்ட 7-வது செஷன் கோர்ட்டில் இருந்தது. இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரணை நடத்தி நீதிபதி தீர்ப்பு கூறினார்.
அதில் விதவை பெண்ணை கற்பழித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய ரவிக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.